தலையெழுத்து - சிறுகதை 


“சரி! சரி! பேசாம போ! இதுக்கு மேல குதிச்சுகிட்டு இருந்தேன்னா எனக்கு பொல்லாத கோபம் வந்துடும்!”


திடுக்கிட்டுப் போனான் மாணிக்கம். “டேய், நீ யாரிடம் என்னடா பேசுகிறாய்? நான் உன்ன பெத்த அப்பன்’டா!” கத்தினான் அவன்.


“அதனால்தான் வெறும் பேச்சோட நிறுத்திக்கிறேன். இல்லேன்னா நடக்கிறதே வேற! அப்பன் மாதிரியா நீ நடந்து கொள்கிறாய்? தினம் தினம் குடிச்சுட்டு வந்து அம்மாவை நாய அடிக்கிற மாதிரி போட்டு அடிக்கிறாயே!” பதிலுக்கு கத்தினான் சந்திரன். அப்பனை விட அவன் குரல் ஓங்கியே ஒலித்தது.


இவ்வளவு நாட்களாக அடக்கி வைத்திருந்த ஆத்திரமெல்லாம் பீறிட்டு வந்தது சந்திரனுக்கு. அப்பன் மூஞ்சியில் ஓங்கி குத்த வேண்டும் என்று கை பரபரத்தது!


“என் பெண்டாட்டியை நான் அடிப்பேன். உதைப்பேன். அதைக் கேக்க நீ யாருடா? தருதலைப் பய மவனே!” குடி வெறியில் ஆக்ரோஷமாகக் கத்தினான் மாணிக்கம். அவனும் விட்டுக் கொடுப்பதாக இல்லை.


“வேண்டாம்’பா! விட்டுடு. அவர்தான் குடிச்சுட்டு வந்து சத்தம் போடுகிறார் என்றால் நீயும் அவர் கிட்ட மல்லு கட்டிகிட்டு நிற்கிறாயே!” சந்திரனை சமாதானப் படுத்த முயன்றாள் தாயார் மாரியாயி. எங்கே அப்பனும் பிள்ளையும் அடித்துக் கொள்வார்களோ என்று அவளுக்கு ஈரக் குலை நடுங்கியது.


“நீ சும்மா இரும்மா.இந்த ஆளு என்ன நினைச்சு கிட்டு இருக்கிறாரு? தினம் தினம் குடி, சண்டை. இந்த அசிங்கத்துக் கெல்லாம் ஒரு முடிவே இல்லையா? எத்தனை நாளைக்குத் தான் பொறுத்து பொறுத்துப் போகிறது!” அம்மாவிடம் சத்தம் போட்டான் சந்திரன்.


“அடேய்!”என்று கத்திக் கொண்டே மகன் மீது பாய்ந்தார் மாணிக்கம். தன்னை நெருங்க விடாமல் இரண்டு கைகளாலும் முரட்டுத் தனமாகத் தடுத்தான் சந்திரன். ஆனால், பாய்ந்த வேகத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்தார் மாணிக்கம்.


“ஐயோ! பெத்த மகனே என்னை அடிக்கிறானே! இதைக் கேட்க யாருமில்லையா?” வலி தாங்காமல், தரையில் புரண்ட படி கத்தினார் மாணிக்கம்.


அவரைத் தூக்க முயன்றாள் மாரியாயி. “சரிதான் போடீ! புள்ளையா பெத்து வைச்சிருக்கிற நீ?  தறுதலைப் பய!” மாரியாயின் கைகளைத் தட்டி விட்டு தடுமாறிய படி எழுந்து நின்றார் மாணிக்கம்.


“வேண்டாம் சந்திரன்.” புருஷனிடம் ஒன்றும் செய்ய முடியாத மாரியாயி மகனிடம் கெஞ்சினாள். “இதென்ன அசிங்கம்! அப்பனும் புள்ளையும் அடிச்சுகிட்டு! நீயாவது பேசாமல் உள்ளே போயேன்!” கண்களில் கண்ணீர் பொல பொலவென்று கொட்டியது அவளுக்கு.


“நீ போடீ உள்ளே! அவன் கிட்ட போய்  கெஞ்சி கிட்டு நிற்கிறியே! வெட்கமா இல்லை உனக்கு?” மாரியாயின் தலை மயிரை அப்படியே கொத்தாகப் பிடித்து இழுத்தான் மாணிக்கம்.


அதற்கு மேல் சந்திரனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அப்படிப் பட்ட ஆக்ரோஷம் எங்கிருந்து வந்ததோ தெரியவில்லை. மாணிக்கத்தின் விலாவில் ஓங்கி ஓர் எத்து விட்டான்.


“ஐயோ அம்மா!” விலாவைப் பிடித்துக் கொண்டு மறுபடியும் தரையில் சரிந்தான் மாணிக்கம். அது வரையில் அவனிடம் இருந்த வீம்பெல்லாம் எங்கோ போய் ஒளிந்து கொள்ள, வலி தாங்காமல் முனகினான் மாணிக்கம்.ஈனக் குரலில் அவன் முனகியதைப் பார்க்க சந்திரனுக்கு சகிக்கவில்லை.


மாரியாயி நிலை குத்தி நின்றாள்.


அதற்கு மேல் சந்திரனாலும் அங்கு நிற்க முடியவில்லை. சைக்கிளை எடுத்து கொண்டு வெறி பிடித்தவனைப் போல மிதித்தான். “சே! என்ன காரியம் பண்ணி விட்டேன்!” தன்னையே பழித்துக் கொண்டு, எங்கு போகிறோம் என்று தெரியாமல் சைக்கிளை மிதி மிதி என்று மிதித்தான். ‘என்ன இருந்தாலும் மாணிக்கம் தன்னைப் பெத்த அப்பன் இல்லையா! என்னதான் அப்பன் தப்பு பண்ணினாலும் பெத்த மகன் இப்படியா நடந்து கொள்வது? இனி எந்த மூஞ்சியுடன் அவர் முகத்தில் விழிக்கிறது? ஆத்திரக் காரனுக்கு புத்தி மட்டு என்று சொல்லுவது எவ்வளவு உணமையாகி விட்டது. சந்திரனுக்கு தன் மீதே இப்பொழுது ஆத்திரம் ஆத்திரமாக வந்தது.


வீட்டில்-


தன்னை தூக்க முயன்ற பெண்டாட்டியை சுடு வார்த்தைகளால் விரட்டி அடித்தான் மாணிக்கம்.


“நீயும் உன் புள்ளையும் சேர்ந்து கிட்டு என்னையே உதைக்கிறீங்க இல்லே! இதெல்லாம் நல்லது இல்லேடி! அந்தச் சனியன் இனிமேல் இந்த வீட்டுப் பக்கம் வரக் கூடாது. அதையும் மீறி வந்தான் என்றால் அப்புறம் நான் மனுஷனாக இருக்க மாட்டேன்.”




ஆத்திரத்தில் என்ன சத்தம் போட்டாலும், சற்று முன்பு நடந்த சம்பவம் மாணிக்கத்தை புரட்டி எடுத்து விட்டது. அடி மனது ரணமாகி, நிலை குலைந்து போனான் அவன். பெத்த புள்ளையே அப்பனை உதைப்பதா! கூனிக் குறுகிப் போனான் மாணிக்கம். தான் நடந்து கொண்ட விதமும் கொஞ்சம் கூட சரியில்லை என்பது அவனுக்கு புரியத்தான் செய்தது. இருந்தாலும்… அப்பன் பிள்ளை என்று ஒரு வித்தியாசம் இல்லையா?


“என்னங்க…” சன்னமான குரலில் வார்த்தைகள் வெளி வராமல் தடு மாறினாள் மாரியாயி.


“என்னடி!”


“அவன் ஏதோ புத்தி கெட்டு நடந்து கிட்டாங்க!”


“அப்படி இல்லையடி. என் மானமே போச்சு! மகன் கை நீட்டுகிற அளவுக்கு நானும் புத்தி கெட்டு நடந்துகிட்டேன். என் புத்தியை செருப்பால அடிக்கணும்.” தலையில் அடித்துக் கொண்டு, குரல் வெடித்துச் சிதற வாய் விட்டு அழ ஆரம்பித்தான் மாணிக்கம்.


புருஷனை அது வரை அந்த கோலத்தில் பார்த்திராத மாரியாயியும் கேவிக் கேவி அழ ஆரம்பித்தாள்.


அன்றிரவு மாணிக்கத்தால் தூங்க முடியவில்லை. புரண்டு புரண்டு படுத்தான். பெருத்த அவமானம். மன உளைச்சல். மாரியாயியால் மட்டும் தூங்க முடிந்ததா என்ன! அவளும் ஒரு மூலையில் கண்களைக் கசக்கிக் கொண்டு சுருண்டு கிடந்தாள்.


வெகு நேரம் கழித்துத் தான் சந்திரன் அன்று வீடு திரும்பினான். மாணிக்கம் அப்பொழுது விழித்து கொண்டு தான் இருந்தான். மனதுக்குள் அவனுக்கு இனம் புரியாத படபடப்பு. தூங்குவது போல படுத்துக் கிடந்தான் அவன். சப்தமில்லாமல் உள்ளே நுழைந்தான் சந்திரன். அப்பனைக் கண்டு அவனுக்கு பயம் எதுவும் இல்லை. அவர் விழித்துக் கொண்டால் அவர் முகத்தில் எப்படி முழிப்பது என்ற அவமானம் அவனுக்கு.


மாணிக்கம் படிப்பறிவு இல்லாதவன். நான்காம் வகுப்போடு புத்தகத்தை மூட்டை கட்டி வைத்து விட்டு, கித்தா வெட்டும் அம்மாவுக்கு உதவியாகப் போனவன் தான் மாணிக்கம். அந்த தோட்டத்தை விட்டு பத்து வருடங்களுக்கு முன்னால் இப்பொழுது இருக்கும் புறம் போக்கு வீட்டுக்கு வர வரைக்கும் அவன் கித்தா மரம் வெட்டிக் கொண்டுதான் இருந்தான். தினமும் தண்ணியில் மிதப்பவன் தான் அவன். ஆனாலும் ரோஷம் உள்ளவன். தண்ணி போட பணம் இல்லாவிட்டால், வீட்டிலேயே சுருண்டு கிடப்பானே தவிர,கடன் பட்டு சாராயம் குடிப்பதெல்லாம் அவனால் நினைத்துக் கூட பார்க்க முடியாது.


சிறு வயதிலேயே அவனுடைய அப்பன் இறந்து விட்டதால், தான் தோன்றித் தனமாகத் திரிந்து எல்லா கெட்ட பழக்க வழக்கங்களையும்  கற்றுக் கொண்டான். சிகரெட், சூதாட்டம் போன்ற பழக்கங்களை கல்யாணத்திற்கு பிறகு நிறுத்தி விட்டாலும், குடியை மட்டும் அவனால் விடவே முடியவில்லை. ஒரு வேளை அது அவனது ரத்தத்தில் கலந்து  விட்டதோ என்னவோ.



மாரியாயியை அவன் என்னதான் அடித்து துன்புறுத்தினாலும், அவள் மீது அவனுக்கு அன்பு இல்லாமல் இல்லை. மாரியாயிக்கும் அது நன்றாகத் தெரியும். அதனால் தான் மாணிக்கத்தை அவளால் வெறுத்து ஒதுக்க முடியவில்லை. அவன் குடித்து விட்டு வந்து கூப்பாடு போடும் சமயங்களில் மட்டும், அவனுக்கு மேலும் ஆத்திரம் ஏற்படாத படி நடந்து கொள்வாள். அப்படி இருந்தும் கூட, சில சமயங்களில் இடக்கு மடக்காக ஏதாவது நடந்து மாணிக்கம் எரிந்து விழுவான். அந்த சமயங்களில் அவனை கொன்று போட்டால் கூட தகும் என்று எண்ணிக் கொள்வாள் மாரியாயி.


மாரியாயியையும் சந்திரனையும் இனி எந்த முகம் கொண்டு பார்ப்பது என்று புரியாமல் படுக்கையில் வெதும்பினான் மாணிக்கம்.அவமானத்தால் மனது கூனிக் குறுகியது. வீட்டை விட்டு ஓடி விடலாமா என்று கூட ஒரு கணம் சலனப் பட்டான்.அப்படி ஓடிப் போய் விட்டால் மட்டும் சாயந்தரம் நடந்த நிகழ்ச்சி இல்லை என்று ஆகி விடுமா? அவன் எங்கு போனாலும் கூடவே நிழல் போல வராதா என்ன?


வீட்டை விட்டு ஓடிப் போவதை விட, இந்த உலகத்தை விட்டு ஒரேயடியாக போய் விடுவது இன்னமும் மேலல்லவா! பெண்டாட்டி பிள்ளை முகத்தில்  விழிக்க வேண்டியிருக்காது அல்லவா? ஏன் எந்த ஒரு கவலையும் அவனை கலங்கடிக்காது அல்லவா! பெண்டாட்டி கண் முன்னாள் மகனிடம் வாங்கிய அடியைப் பற்றி எண்ணி எண்ணி வாழ்நாள் முழுதும் கவலைப் பட வேண்டியதில்லையே! ஆம், அதுதான் சரியான் முடிவு என்று தோன்றியது மாணிக்கத்திற்கு.


படுக்கையிலிருந்து துள்ளி எழுந்தான் மாணிக்கம். இனி எதைப் பற்றியும் அவன் கவலைப் பட போவதில்லை. சத்தம் எழாமல் வாசல் கதவைத் திறந்து கிணற்றுப் பக்கம் மெதுவாக நடந்த மாணிக்கத்திற்கு மனது தெளிவாக இருந்தது. குழாய் நீர் வந்த பிறகு அந்தக் கிணற்றை யாரும் பாவிப்பது இல்லை. ஆனாலும் நல்ல ஆழமான கிணறு அது.


தொபீர்!


அந்தச் சத்தம் கேட்டு சற்று முன்புதான் கண்ணயர்ந்த மாரியாயி திடுக்கிட்டு விழித்தாள்.


“என்னங்க! என்னங்க!” புருஷனைக் கூப்பிட்டாள் மாரியாயி. பதிலில்லை. மாணிக்கம் படுத்திருந்த கட்டில் காலியாகக்  கிடந்தது. இனம் புரியாத பயம் அவள் மனத்தைக் கவ்வியது. ‘எங்கே போனார் இவர்? அதுவும் இந்த நேரத்தில்.’

  

“சந்திரன். எழுந்திருப்பா.” மகனை குலுக்கி எழுப்பினாள்.


“என்னம்மா!” தூக்கத்தில் சிணுங்கினான் சந்திரன்.


“உங்கப்பாவை காணவில்லை ஐயா. எங்கே போனார் என்று தெரியல! எனக்கு பயமா இருக்குது. எழுந்திருச்சு, என்ன ஏதுன்னு பாத்துட்டு வா ஐயா!”


“என்னது அப்பாவை காணவில்லையா?”வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்தான் சந்திரன். “சரி! சரி! நீங்க கவலைப் பட வேணாம். நான் போய் தேடிப் பார்க்கிறேன்.” அம்மாவை சமாதானப் படுத்திய சந்திரனுக்கு, அப்பாவை எங்கே போய் தேடுவது என்று ஒரு கணம் புரியவில்லை. “ஒரு வேளை சும்மா இப்படியே வெளியே போயிருப்பாரோ! கொஞ்ச நேரம் பொறுத்துப் பார்ப்போமே!” அம்மாவை கூர்ந்து பார்த்தான்.


“இல்லை ஐயா. ஏதோ  நடக்கக் கூடாதது நடந்திருக்கும்’ணு  என் மனசு சொல்லுது. செத்த முந்தி கூட தண்ணியில ஏதோ விழுந்த மாதிரி ஒரு சத்தம் கேட்டுச்சு. அதக் கேட்டுத்தான் நான் கண் முழிச்சேன்.” தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்து விட்டாள் மாரியாயி.


“தண்ணியில விழுந்த சத்தமா? சரி, நான் கிணத்துப் பக்கம் பார்த்துட்டு வந்திடுறேன். நீங்க பயப் படாமல் இருங்க.” டார்ச் லைட்டை எடுத்துக் கொண்டு கிணற்றுப் பக்கம் போனான் சந்திரன். அவனுக்கே இப்பொழுது கலக்கமாக இருந்தது. ‘அப்பாதான் கிணற்றில் விழுந்து விட்டாரோ! எதுக்காக அவர் கிணத்து பக்கம் போகணும்? சே! சே! அப்படியெல்லாம் இருக்காது.’ கடவுளை வேண்டிக் கொண்டே கிணற்றடியை நெருங்கியவனுக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.


எது நடக்கக் கூடாது என்று அவன் பயந்தானோ, அதுதான் நடந்திருக்கிறது. மாணிக்கத்தின் சிலிப்பர் கிணற்றடியில் கிடந்தது. தலையில் கை வைத்த படி தரையில் சரிந்தான் சந்திரன்.


கருத்துகள்