சியோலில் ஐந்து நாட்கள்
சியோலில் ஐந்து நாட்கள்
18/12/2010 - முதல் நாள்
18 டிசம்பர் 2010 - என் குடும்பத்துடன் நான் தென் கொரியாவிற்கு புறப்பட்டேன். ஏன் தென் கொரியா என்று கேட்டால் அதற்கு எந்த ஒரு குறிப்பிட்ட பதிலையும் என்னால் சொல்ல முடியாது. எங்காவது செல்ல வேண்டும் என்று விரும்பினோம்.”தென் கொரியாவிற்கு போகலாமே!” என்று என் மகள் சொன்னபோது, “ஏன் கூடாது!” என்று எல்லாரும் சரி என்று முடிவெடுத்தோம்.
இஞ்சியோன் (Incheon) அனைத்துலக விமான நிலையத்தை அடைந்த பொழுது மணி ஏறக்குறைய மாலை 3.45 (கொரிய நேரம்). ஏற்கனவே தங்குவதற்காக ‘புக்’ பண்ணியிருந்த ஹோட்டலுக்கு முத்லில் புறப்பட்டோம். விமான நிலையத்தில் இருந்து ஒரு ஐம்பது நிமிட ரயில் பயணம் அது. சியோல் நகரில் உள்ள சிட்டி ஹாலில் அமைந்துள்ளது அந்த ஹோட்டல். கொரியாவில் அப்பொழுது குளிர் காலமாதலால், ரயில் வண்டியின் இருக்கைகளில் ஹீட்டரின் மூலம் இதமான சூடு ஏற்றுகிறார்கள். எனவே அந்த பயணம் சுகமாகவே இருந்தது.
சியோலில் 11 பெரு விரைவு ரயில் (metro) இணைப்புகள் உள்ளன. ஆனாலும் அந்த 11 இணைப்புகளும் எதாவது ஒரு நிலையத்துடன் இணைக்கப் பட்டுள்ளதால், சியோலின் எந்த பகுதிக்கும் இலகுவாகச செல்ல முடிகிறது. என்ன ஒரு குறைபாடு என்றால், ரயில் டிக்கட்டின் விலை சற்று அதிகம் என்பதுதான். சிங்கப்பூரில் இரண்டு வெள்ளி முப்பது காசுகளுக்கு செல்லக் கூடிய பயணத்திற்கு சியோலில் ஒன்பது வெள்ளி (சிங்கப்பூர் வெள்ளி) செலவாகிறது.
சிட்டி ஹாலில் நாங்கள் இறங்கிய பொழுது, கடுங் குளிர் எங்களை வரவேற்றது. அருகில் உள்ள மின்னொளி 2 டிகிரி செல்சியசைக் காட்டியது.அந்த குளிருக்கு நாங்கள் பிரயாணம் செய்வதற்கு முன்பே தயார் செய்திருந்தாலும் கூட, உடம்பு வெட வெடக்கத்தான் செய்தது. நல்ல வேளையாக, ஹோட்டல் ஐந்து நிமிட நடக்கும் தூரத்தில் தான் இருந்தது. ஹோட்டலுக்கு சென்று எங்கள் பயணப் பைகளை வைத்து விட்டு, அந்த குளிரில் எங்காவது செல்ல விரும்பினோம். நம்டெமுன் (Nam Dae Mun) சந்தை அருகில்தான் இருக்கிறது என்பதை அறிந்துக் கொண்ட நாங்கள் அந்த சந்தையை நோக்கி நடுங்கும் குளிரில் நடக்க ஆரம்பித்தோம்.
நான் பார்த்த சந்தையிலே மிகப் பெரிய சந்தைதான் இந்த நம்டெமுன். 66 175 சதுர மீட்டரில் மைந்துள்ள இந்தச் சந்தை, பினாங்குத் தீவின் கால் பகுதி பெரியது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். பினாங்குத் தீவின் பரப்பளவு 293 000 சதுர மீட்டர். 24 மணி நேரமும் திறக்கப் பட்டிருக்கும் இந்தச் சந்தை சியோலின் மையப் பகுதியில் உள்ளது. சகல் விதமான பொருட்களும் இங்கு கிடைக்கின்றன.
சியொல் மிகப் பெரிய நகரமே. 11 மில்லியன் மக்கள் வசிக்கும் இந்நகரம் சிங்கப்பூரை விட இரண்டு மடங்கு பெரிது என்று தைரியமாகச் சொல்லலாம்.
நம்டெமுன் சந்தையின் ஒரு முகப்பு
நம்டெமுன்
சுமார் ஒரு மணி நேரம் நடந்த பிறகு எங்களுக்கு பசி எடுக்க ஆரம்பித்தது. உணவு ஸ்டால்கள் அங்கு நிறைந்து காணப்படுவதால், சாப்பாட்டிற்கு பிரச்சனையில்லை. எல்லா வகை உணவுகளுக்கும் கிம்சி எனப்படும் கொரிய பதார்த்தம் தடையில்லாமல் கிடைக்கிறது.
உணவிற்கு பிறகு புதிய தெம்புடன் எங்களுடைய நடையைத் தொடங்கினோம். ஐந்து மணி அளவில் இருள் சூழத் தொடங்கியதால், ஹோட்டலுக்கு கிளம்ப முடிவெடுத்தோம். ஒரு அரை மணி நேரம் நடந்தும் நாங்கள் எந்த திக்கை நடந்து செல்கிறோம் என்று புரியாமல் குழம்பிப் போனோம். இரண்டு பேரை நிறுத்தி ஹோட்டலைப் பற்றி சொன்னபொழுது தமக்கு ஆங்கில மொழி தெரியாது என்று நகர்ந்தனர். அதில் ஒருவர் தனக்கு ஆங்கிலம் தெரியாது என்று ஆங்கிலத்திலேயே கூறியது அந்த சமயத்திலும் எங்களுக்கு நகைச்சுவையாக இருந்தது.
சில வினாடிகளில் ஒரு தம்பதியை அணுகி எங்கள் பிரச்சனையை கூறியபொழுது, அவர்கள் எங்களின் ஹோட்டலின் பெயரை விசாரித்தனர். நல்ல வேளையாக கொரிய மொழியில் எழுதப்பட்டிருந்த அந்த ஹோட்டலின் அறைச் சாவியை கையுடன் கொண்டு வந்திருந்ததால் அவரிடம் உடனே எடுத்துக் காண்பித்தேன். அதைப் பார்த்ததும் அவர் முகத்தில் புன்னகை தோன்றியது.
“இது ஹோட்டலின் பெயரல்ல! இது ஹோட்டல் அறையின் எண் - கொரிய மொழியில்!” என்று அவர் சொன்னதும் எனக்கு தூக்கி வாரிப் போட்டது. அது ஹோட்டலின் பெயர் என்று எண்ணிக் கொண்டு ஹோட்டலின் கார்டைக் கூட நான் எடுத்து வரவில்லை.
“சரி. ஏதாவது அடையாளம் தெரியுமா?”
“ஆம். நம் சான் பார்க்கிற்கு பக்கத்தில் தான் அந்த ஹோட்டல்.”
“அப்படியானால் நிங்கள் இப்படியே ஒரு இருபது நிமிடம் நடந்தால் நம் சான் பார்க் தெரியும். அங்கிருந்து ஹோட்டலைக் கண்டு பிடித்து விடலாம்,” என்றார் அவர். அத்தோடு நில்லாமல், எங்களுடனேயே நடக்கவும் ஆரம்பித்தார்கள் அந்த தம்பதியினர். எத்தனையோ தடவை நான் மறுத்தும், கூடவே நடந்து எங்களுக்கு வழி காட்டியப் பிறகே அவர்கள் தமது திக்கை நோக்கி நடக்க ஆரம்பித்தனர்.
ஒரு வழியாக நாங்கள் ஹோட்டலை அடைந்த பொழுது மணி ஏறக்குறைய ஏழு ஆகிவிட்டது. நடந்த களைப்பும் குளிரும் ஒன்று சேர எங்களை வாட்டியதால், அன்றிரவை ஹோட்டலிலேயே தங்க முடிவு செய்தோம். தொலைக்காட்சி பார்த்தவாறு நன் தூங்கிப் போய் விட்டேன்.
கருத்துகள்
கருத்துரையிடுக