சியோலில் ஐந்து நாட்கள் [4]

 21/12/2014 - நான்காம் நாள் 


கொரியாவிற்கு செல்லும் பொழுது, பனி  சறுக்கு விளையாட வேண்டும் என்று என் மகன் ஏற்கனவே சொல்லி வைத்திருந்ததால், நாங்கள் காலையிலேயே Bears Town Ski Resort-ற்கு  கிளம்பினோம். அதற்கு சியோலில் இருந்து சுமார் ஐம்பது நிமிட பஸ் பயணம் செய்ய வேண்டியிருந்தது.


பஸ் ஓட்டுனரிடம் கட்டணம் எவ்வளவு என்று நான் ஆங்கிலத்தில் கேட்க, அவர் ஆங்கிலம் புரியாமல் கொரிய மொழியில்  ஏதோ  சொல்ல எனக்கு ஒன்றும் புரியவில்லை. என் கையிலிருந்த கொரிய பணத்திலிருந்து கட்டணத்திற்கு வேண்டிய தொகையை அவரே எடுத்துக் கொள்ள முதல் பிரச்சனை ஒரு வழியாக தீர்ந்தது. கொரியாவில் வாகனங்கள் சாலையின் வலது தடத்தில் ஓடுகின்றன. தவிர, பஸ் தடம் சாலையின் நடுவில் இருக்கிறது. எனவே பஸ் நிருத்துமிடங்க்களும் சாலையின் நடு தளத்தில் இருக்கின்றன.


ஒரு  இருபது நிமிட பயணத்திற்கு பிறகு, பஸ் சியோலுக்கு வெளியே உள்ள மலைப் பாங்கான பகுதிகளில் பயணிக்கிறது. ஒரு புறத்தில் மலைச் சாரலும் இன்னொரு புறம் பள்ளத்தாக்குமாக, கண்ணைக் கவருகின்றன கொரியாவின் கிராமப் புறம். இலையுதிர்ந்த மரங்களும், பனி  படர்ந்த மலைச் சாரலும், கோடை காலத்தில் அதன் அழகு இன்னமும் எடுப்பாக இருக்குமென்பதை பறை சாற்றின.


இன்னுமொரு 30 நிமிட பயணத்திற்கு பிறகு, சிறு பட்டணம் போல் தோற்றமளித்த ஒரு பகுதியில் பஸ்ஸை நிறுத்தி, நாங்கள் போக வேண்டிய இடம் அதுதான் என்பதை சைகை மூலம் தெரிவித்தார் ஓட்டுனர். அவருக்கு நன்றி சொல்லிவிட்டு, பஸ்ஸிலிருந்து இறங்கியதும் எங்களுக்கு ஒரு கணம் ஒன்றும் புரியவில்லை. அது ஒரு சிறு பட்டணமாக இருந்தாலும், வெளியில் யாரும் இல்லாததால் அந்த இடம் வெறிச்சோடிக் கிடந்தது.


நாங்கள் செல்ல வேண்டிய Bears Town Ski Resort எந்த பக்கத்தில் இருக்கிறது என்பது கூட எங்களுக்கு புரியவில்லை. கண் முன்னே பல திசை காட்டிகள் இருந்தும், எல்லாம் கொரிய  மொழியில் இருந்தன , யாராவது அந்த பக்கமாக வருகிறார்களா, அவர்களிடம் விசாரிக்கலாமே என்று எண்ணிக் கொண்டிருந்த பொழுது, எதிர் புறத்தில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கிலிருந்து வெளியேறிய ஒரு வாகனம் எங்கள் முன் நின்றது. அப்படி நிற்பவர்கள் எல்லாம் சந்தேகத்திற்குரியவர்கள் என்று நாம் பழக்கப் படுத்தப் பட்டிருந்ததால், எனக்கு சற்று குழப்பமாக இருந்தது. காரின் கண்ணாடியை இறக்கி, அதன் ஓட்டுனர். “எங்கே போகிறீர்கள்?” என்று ஆங்கிலத்தில் கேட்டார்.


எனது பதிலை கேட்ட அவர், அந்த resort, அங்கிருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது என்றும், அவரே எங்களை அங்கு இட்டுச் செல்வதற்கு முன் வந்தார். நாங்கள் அங்கு நடந்தே செல்வதாகக் கூறியும் அவர் எங்களை வற்புறுத்தியதால், தயங்கிய படியே அவருடைய வாகனத்தில் நாங்கள் ஏறினோம். ஐந்து நிமிடத்தில் அந்த resort முன் நாங்கள் இருந்தோம். அவருக்கு நிறைய நன்றி கூறியபடி resort-னுள் நாங்கள் நுழைந்தோம். அங்கு இருந்த வரவேற்பாளருக்கும் ஆங்கிலம் தெரியாததால் அவர் கூறியதை எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. அப்படியே ஒரு ஐந்து நிமிடம் கழிந்தது. உதவி கேட்பதற்கும் அங்கு யாரும் இல்லை.


திடீரென்று நுழை கதவைத் திறந்து கொண்டு ஒருவர் உள்ளே நுழைந்தார். எங்களை அங்கு இட்டு வந்தவர்தான் அவர்! அவர் இங்கு என்ன செய்கிறார் என்று நான் குழம்பிய வேளையில், அவரும் அந்த வரவேற்பாளரும் கொரிய  மொழியில் ஏதோ  பேசிக் கொண்டனர். பிறகு எங்கள் பக்கம் திரும்பிய அவர், “இன்றைக்கு இந்த resort-டின் ஒய்வு நாள். அதனால் அது மூடப் பட்டிருக்கிறது. அதைச்  சொல்லத்தான் அவர் முயன்றிருக்கிரார்.” லேசான புன்முறுவலுடன் அவர் சொன்னது, அந்த ஏமாற்றத்திலும் எனக்கு சிரிக்கத்தான் தோன்றியது.  ஒய்வு நாள் என்று கூட பார்க்காமல் அங்கு வந்த என் முட்டாள் தனத்தையும் நான்  பழித்துக் கொண்டேன்.


“பரவாயில்லை. இங்கிருந்து இன்னொரு அரை கிலோமீட்டரில் இன்னொரு பனிச் சறுக்குத் தளம் உள்ளது. நான் உங்களை அங்கு அழைத்துப் போகிறேன்,’ என்று அவர் சொன்னதும் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ‘முன்பின் தெரியாத ஒருவருக்கு இவ்வளவு தூரம் சென்று ஒருவரால் உதவி செய்ய முடியுமா’ என்று என்னால் நம்ப முடியவில்லை. நம்மிடம் ஒருவர் வழி  கேட்டால், ‘இப்படிப் போ! அப்படிப் போ!’ என்றுதான் நாம் சொல்லுவோம். ஆனால் இவரோ தன்  வேலையையும் நேரத்தையும் விட்டு விட்டு, பெரிதும் மெனக் கெடுகிறாரே!


இருப்பினும் அங்கு குறைந்தது நான்கு  ஐந்து மணி  நேரங்களை பனிச் சறுக்கு விளையாடுவதிலும், வெறுமனே ஒய்வெடுப்பதிலும் கழித்தோம். எங்களுடைய மதிய உணவையும் அங்கேயே முடித்துக் கொண்டோம். அன்றைய பொழுதை நாங்கள் அங்கு இனிமையாகக் கழிக்க பெரும் காரணமாக இருந்தவர்  இம், அதுதாம் அந்த கொரிய நண்பருடைய பெயர், நான்  நன்றியுடன் நினைத்துக் கொண்டேன். மற்றவர்களுக்கு உதவுவதில் பெருமை கொள்ளும்  கொரியர்களின் இந்த பண்பை நான் பிறகு விவரிக்கிறேன்,


மத்தியானம் முன்று மணி அளவில், களைப்பாக, ஆனால் அதே நேரத்தில் களிப்பாக நாங்கள் ஹோட்டலுக்குத் திரும்பினோம், சில மணி நேரங்கள் ஓய்விற்கு பிறகு நாங்கள் மறுபடியும் நம்டெமுன் சந்தைக்கு மறுபடியும் சென்றோம்,


கருத்துகள்