சிறுகதைத் திறனாய்வு - சிறு முயற்சி
விதியும் விபத்தும்
த. ஜெயகாந்தன் (1969)
த. ஜெயகாந்தன் - தமிழ் சிறுகதை உலகில் அறிமுகம் தேவையில்லாத எழுத்தாளர். மறக்கவியலாத பல சிறுகதைகள் எழுதி, தமிழ் சிறுகதை உலகின் பிதாமகன்களில் ஒருவராகத் திகழ்ந்தவர் இவர், பரிட்சார்த்த முறையில் சில சிறுகதைகளும் பண்ணியுள்ளார். அதில் ஒன்றுதான், 1969-ல் அவர் எழுதிய ‘விதியும் விபத்தும்’.
ஒரு மாட்டுகாரச் சிறுவனால் சுவைத்து வீசப்பட்ட மாங்கொட்டை, ஒரு புழுவுக்கு இரையாகாமல் தப்பித்து, பெரிய மாமரமாக வளர்ந்து, கனிகள் ஈந்து, அந்த கனிகளில் ஒன்று இன்னொரு மாட்டுகாரச் சிறுவனால் சுவைக்கப் பட்டு சகதியில் வீசப் படுகிறது இந்த மாங்கொட்டை எப்படி இன்னொரு புழுவிற்கு இரையாகிறது என்பதுதான் கதை.
முதல் மாங்கொட்டை எப்படி விதி வசத்தால் தப்பியதோ, அதற்கு நேர்மாறாக, இரண்டாவது மாங்கொட்டை புழுவிற்கு இரையாவது ஒரு விபத்து என்ற வாழ்க்கையின் தத்துவத்தை அழகாக, ரத்தினச் சுருக்கமாகச் சொல்லுகிறார் ஜெயகாந்தன். பெரும்பாலான சிறுகதைகளைப் போல, ஒரு நிகழ்ச்சியை, அது எப்படி நடந்தது என்று சொல்லாமல், அது ஏன் நடந்தது என்ற கோணத்திலிருந்து, ஆன்மீகக் கண் கொண்டு பார்த்து எழுதியிருப்பது புதுமையான முயற்சி.
‘அழிவது விபத்து; அழியாமல் காப்பாற்றப் பட்டால் விதி. இது எல்லா உயிர்களுக்கும் பொது. விதி என்பது ஒரு விபத்தும், விபத்து என்பது ஒரு விதியாகும்,’ என்று வேதாந்தம் பேசுகிறார் ஜெயகாந்தன்.
இச்சிறுகதையின் கதை மாந்தர்களை எந்த வகையிலும் உணர்வு பூர்வமாக சிருஷ்டிக்க முடியாத பட்சத்தில், கருவுக்கே முக்கியத்துவம் கொடுக்கப் பட்டிருக்கிறது. அதனால்தான் இந்த கதையை படிக்கும் வேளையில் ஆயாசம் ஏற்படுகிறது. மேலும் எந்த உரையாடலும் இல்லாமல் கதையை நகர்த்தியிருப்பது புதுமையாக இருந்தாலுங் கூட, அது ஒரு கட்டுரை வடிவில் அமைந்து போனது தவிர்க்க முடியாததே. தவிர மிகவும் தத்துவப் பூர்வமான ஒரு கருவைக் கையாண்டு இந்தச் சிறுகதையை அவர் எழுதியிருப்பது எத்தனை வாசகர்களை கவர்ந்திழுக்க முடியும் என்பது சந்தேகமே. இதுவும், இது போன்ற சோதனைக் கதைகள் தமிழில் வெற்றி பெற முடியாமல் போனதற்கான காரணங்களில் ஒன்று.
ஜெயகாந்தனுக்கு முன்பே, ‘தெருவிளக்கு’ (1934) என்ற கதையின் மூலம், ஒரு தெருவிளக்கை கதை மாந்தராகக் கொண்டு வாழ்க்கையின் தத்துவத்தைப் பேசியிருக்கிறார் புதுமைப்பித்தன்.
ஒரு சிறுகதை வெற்றி பெறுகிறதா இல்லையா என்பதை காலம்தான் நிச்சயிக்கும்.
கருத்துகள்
கருத்துரையிடுக