சியோலில் ஐந்து நாட்கள் (2)

 19/12/2010 - இரண்டாம் நாள் 


ஒரு கொரிய நண்பர் எனக்கு ஏற்கனவே சொன்னபடி, அன்று நாங்கள் நம் சான் பார்க்கிற்கும், அங்கிருக்கும் சியோல் கோபுரத்திற்கும் செல்ல முடிவெடுத்தோம். நம் சான் என்பது சியோல் நகரத்தில் அமைந்துள்ள ஒரு மலையின் பெயர். அங்கு அமைந்துள்ள இந்த பூங்கா சியோலுக்கு அழகு சேர்க்கிறது என்பதுதான் உண்மை. மலை அடிவாரத்தில் இருந்து அதன் உச்சி வரை படிகட்டுகள் உள்ளன. நாங்கள் நடந்தே அங்கு சென்றோம்.



நம் சான் பார்க் - குளிர் காலத்தில் 


படிகட்டுகளின் இரு மருங்கிலும், கண்ணுக்கு எட்டிய துரம் வரையில் இயற்கை எழில் காட்சிகள் மனத்தைக் கொள்ளை கொள்கின்றன. மலை உச்சியிலிருந்து, சியோல் மாநகரத்தை நாலாபுறமும் பார்க்க முடிகிறது. சியோல் நகரின் மத்தியில் அந்நகரத்தை இரண்டாக பிளக்கும் ஹங்கங் நதி  (Hangang River) அமைதியாக ஓடுகிறது. கோடை காலத்தில் இந்த நதியிலும் அதன் கரைகளிலும் பல activitiகள் நடக்கின்றன. இன்னொரு முறை நான் கொரியாவிற்கு சென்றால் அது கோடை காலத்தில்தான் என்று அப்பொழுது முடிவெடுத்தேன்.


பிறகு நாங்கள் அந்த மலை உச்சியில் இருக்கும் சியோல் கோபுரத்திற்குள் நுழைந்தோம். இது கோலாலும்பூரில் இருக்கும் telecommunication tower-ரைப் போன்றதுதான். 1969-ல் கட்டப் பட்ட இந்த கோபுரத்தின் 237 மீட்டராகும். மின் தூக்கி மூலம் அதன் மேல் தளத்திற்கு சென்று அங்கிருந்து சியோல் நகரத்தை பார்த்து ரசிக்கலாம். வயது வந்தவர்களுக்கு 7000 வான் (22 ரிங்கிட்) சிறுவர்களுக்கு 3500 வான் கட்டணம். 


மொத்தத்தில் சுமார் இரண்டரை மணி நேரங்கள் அங்கு செலவிட்ட பின்னர், நாங்கள் கால்நடையாகவே நம் சான் மலையிலிருந்து இறங்கினோம். 



நம் சான்  பார்க் மலை உச்சியிலிருந்து 


மதிய உணவிற்காக நாங்கள் Lotte World என்றழைக்கப் படும் உலகின் மிகப் பெரிய உள்ளரங்க theme park-ற்கு சென்றோம். சியோல் மத்திய பகுதியில் இருந்து இரயிலின் மூலம் இங்கு செல்லலாம். தென் கொரியாவின் மிகப் பெரிய பனிச் சறுக்கு தளமும்  இங்குதான் உள்ளது.


அது தவிர ஹோட்டல், விற்பனை மையங்கள், அரும் பொருட்காட்சியகம் என்று பயணிகளை ஈர்க்கும் பல கவர்ச்சிகரமான வசதிகள் இந்த மையத்தில் அமைக்கப் பட்டிருக்கின்றன. வருடத்திற்கு சுமார் 8 மில்லியனுக்கும் மேற்பட்ட பயணிகள் இங்கு வருகை புரிவதாக நான் அறிந்துக் கொண்டேன்.

 

எங்கள் மதிய உணவை ஒரு கிழக்கத்திய உணவகத்தில் உட்கொண்டு, சுமார் மூன்று மணி நேரங்கள் அங்கு செலவிட்டோம். மற்ற பெரிய நகரங்களை போல, சியோலிலும் பொருட்களின் விலை சற்று அதிகமே. கொரிய மக்களின் வருமானம் அதிகம் என்பதால் அவர்களுக்கு அது ஒரு பிரச்சனையே அல்ல. சராசரி ஆசிரியர் ஒருவரின் மாதாந்தர சம்பளம் சுமார் மலேசிய ரிங்கிட் ஏழாயிரம் ஆகும்.


அங்கிருந்து ஹொட்டலுக்குச் செல்லும் வழியில், புகழ் பெற்ற ஜாம்சில் விளையாட்டு அரங்கத்தையும் நாங்கள் பார்த்தோம். 1988லேயே தென் கொரிய ஒலிம்பிக் விளையாட்டை ஏற்று நடத்திய படியாலும், 2002-ல் உலகக் கிண்ண காற்பந்து போட்டியை நடத்தியிருந்த படியாலும் உலகத் தரம் வாய்ந்த விளையாட்டு அரங்குகளுக்கு இங்கு பஞ்சமில்லை. தவிரவும், தென் கொரியர்கள் பல வித விளையாட்டுகளை விரும்பி ஆர்வமாக பங்கேற்கிறார்கள். தென் கொரியா என்றால் நமக்கு காற்பந்து தான் நம் ஞாபகத்திற்கு வரும். ஆனால் அங்கு, காற்பந்தைத்  தவிர, மெது பந்து, கூடைப்பந்து மற்றும் தே குவாண்டோ போன்ற விளையாட்டுகள் மிகப் பிரபலம்.


இன்னொரு குறிப்பிடத் தகுந்த விஷயம் என்னவென்றால். சியோலில் உடல் பருமன் மிகுந்த ஒருவரைக் கூட நான் பார்க்க வில்லை என்பதுதான். இதனை நான் தற்செயலாகத்தான் கவனிக்க நேர்ந்தது. பிறகு நான் கூர்ந்து கவனிக்க ஆரம்பித்த பொழுது, அது ஆச்சரியமாக இருந்தது. இணையத்தில் நான் இது குறித்து படிக்க ஆரம்பித்த பொழுது, இன்னொரு ஆச்சரியமான தகவலை தெரிந்து கொண்டேன். தென் கொரிய  மக்கள் தொகையில் சுமார் 3.2% உடல் பருமன் உள்ளவர்கள் என்பதுதான் அது. அமெரிக்காவில் அது 30.6%! www.nationmaster.com/graph/hea_obe-health-obesity மலேசியாவில் 43% ஆக இருப்பதாக ஓர் ஆய்வு கூறுகிறது. இங்கு http://www.weightlossmalaysia.com/obesity-statistics/  பார்க்கவும்.


கொரியர்கள் கடும் உழைப்பாளிகள்  மட்டுமல்ல, தங்கள் உடலை பேணிக் காப்பதிலும் முன்னணி வகிக்கிறார்கள். 


கருத்துகள்