சியோலில் ஐந்து நாட்கள் (5)
22/12/2014 - ஐந்தாம் நாள்
கொரியப் பயணத்தின் இறுதி நாள், நான்கு நாட்களை மகிழ்ச்சியுடன் கழித்த எங்களுக்கு, அந்த இறுதி நாள் ஒரு வகையில் சற்று சோகமான நாள்தான், சியோலுக்கு அடுத்து எப்பொழுது போகப் போகிறோம் என்கிற சோகம்தான் அது,
இருந்தாலும் அந்த ஒரு நாளையும் சிறப்பாக கழிக்க எண்ணி, கொரிய போர் நினைவிடத்திற்கு சென்றோம். இதேவோன்(Itaewon) ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 300 அடிகள் தூரத்தில்தான் இந்த பிரமாண்டமான தளம் உள்ளது. நுழை வாயிலில் அமைக்கப் பட்டிருக்கும் ராணுவ வீரர்களின் சிலை நம் மனதை பார்த்த மாத்திரத்திலேயே கவர்ந்து விடுகிறது.
கொரிய கலாச்சாரத்தைப் பற்றி, அதிலும் குறிப்பாக, கொரிய போரைப் பற்றியும் நாம் இங்கு நிறைய தெரிந்து கொள்ள முடிகிறது. 1993-ம் ஆண்டில் கட்டி முடிக்கப் பட்ட இங்கு 10,000-திற்கும் மேற்பட்ட போர் சம்பத்தப் பட்ட பொருட்கள் காட்சிக்கு வைக்கப் பட்டுள்ளன.அதிலும் வலது புறத்தில் அமைக்கப் பட்டுள்ள விமானங்களின் கண்காட்சி குறிப்பிட்டு சொல்லப் பட வேண்டியது. பழங் காலத்தில் இருந்து இன்று வரை போரில பயன் படுத்தப் பட்ட, படுகிற ஆயுதங்களும் நம்மை வியப்பில் ஆழ்த்துவது திண்ணம்.
போர் கால அனுபவங்களை நாம் தெரிந்து கொள்வதற்காக ஒரு பிரத்தியோக அறை இருக்கிறது. அங்கு கொரிய போரின் பொழுது நிகழ்ந்த வாழ்வா சாவா போன்ற நிகழ்வுகளை நாம் மிக துல்லியமாக உணர்ந்து கொள்ளும் வகையில் காட்சிகள் தத்ரூபமாக அமைக்கப் பட்டுள்ளன. சிறப்பான ஒலி ஒளி காட்சிகள், துப்பாக்கி குண்டின் வாடை உட்பட அங்கு அமைக்கப் பட்டிருக்கும் காட்சிகள் நம்மை வியப்பில் மட்டும் ஆழ்த்தாது , மாறாக போர் கால சமயத்திற்கே நம்மை இட்டுச் செல்கின்றன.
அந்த போர் கால நினைவிடத்தில் சுமார் மூன்று மணி நேரம், நேரம் போவதே தெரியாமல் செலவிட்டு, மறுபடியும் நம்டெமுன் சந்தைக்குச் சென்று சில பொருட்களை வாங்கிக் கொண்டோம். பெரும்பாலும், நண்பர்களுக்கு கொடுப்பதற்கான நினைவுப் பொருட்களே. அன்று மாலை ஐந்து மணிக்கு நாங்கள் சிங்கப்பூர் திரும்ப வேண்டியிருந்ததால், சுமார் மூன்று மணி அளவில் இன்சியோன் விமான நிலையம் நோக்கி புறப்பட்டோம்.
நான் ஏற்கனவே சொன்னபடி, சியோல் ரயில் தொடர்பு பல இணைப்புக்களை கொண்டது. எனவே எந்த இணைப்பின் வழி எளிதாக, விரைவாக சென்று விடலாம் என்று நாங்கள் ரயில் தொடர்பு வரைபடத்தை பார்த்துக் கொண்டிருந்த பொழுது, ஒரு இளம் ஜோடி எங்களை அணுகியது.
“எங்கு போகிறீர்கள்?” புன்முறுவலுடன் கேட்டாள் இளம் பெண்.
“இன்சியோன் விமான நிலையத்திற்கு,” என்று நானும் சிரித்துக் கொண்டே சொன்னேன்.
“உங்களைப் பார்த்தால் சுற்றுப் பயணிகள் போல் இருக்கிறது. ஏதேனும் உதவி தேவையா?”
உதவி தேவைப் படுபவர்களுக்கு தானே வலிந்து சென்று உதவவும் ஆட்கள் இருக்கிறார்களா என்று நான் ஒரு கணம் சிந்தித்த வேளையில், “இஞ்சியொனுக்கு, நீங்கள் இங்கிருந்து சிட்டி ஹால் இணைப்பு எடுத்து பிறகு வேறு ஓர் இணைப்பிற்கு மாற வேண்டும்,” என்று கூட இருந்த ஆண் விளக்கம் கொடுக்க ஆரம்பித்தார்.
அந்த இணைப்பை நான் ஏற்கனவே அடையாளம் கண்டு விட்டிருந்த படியால், “அது பற்றித் தான் நானும் யோசித்து கொண்டிருக்கிறேன்.” என்று பதிலளித்தேன்.
“ஆனால் அதில் ஒரு சின்ன சங்கடம்..அந்த இணைப்பிற்கு மாற நீங்கள் ரயில் நிலையத்தில் இருந்து வெளியேறி பிறகு அடுத்த இணைப்பிற்கு மாற வேண்டும். அந்த நிலையத்தில் நிறைய இணைப்புகள் இருப்பதால் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.”
ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட அவர்கள், “பரவாயில்லை, நாங்கள் கூட வந்து வழி காட்டுகிறோம்,” என்று சொன்னார்கள்.
“வேண்டாம், உங்களுக்கு எதற்கு வீண் சிரமம். நான் சமாளித்துக் கொள்கிறேன்.”
“இதில் என்ன சிரமம். சிரமத்தில் உள்ளவர்களுக்கு உதவி செய்வதில் எந்த சிரமும் இல்லை,” என்று அந்த பெண் கூறிய பொழுது என்ன சொல்வது என்று தெரியாமல் நான் வாயடைத்துப் போனேன்.
“அனால் உங்கள் ரயில் பயணத்திற்கான டிக்கெட்டை நான் தான் எடுப்பேன்,: என்று வலியுறுத்தினேன்.
“அதெல்லாம் வேண்டாம்,” என்று சிரித்துக் கொண்டே சொன்ன அந்த பெண், “நாங்கள் ரயில் பாஸில் பிரயாணம் செய்கிறோம்.” என்றாள் .
சுமார் இருபத்தைந்து நிமிடம் எங்களுடன் அடுத்த இணைப்பு வரை வந்த அவர்கள், நாங்கள் எடுக்க வேண்டிய இணைப்பையும் கூட வந்து காண்பித்து, பிறகு மறுபடியும் சிட்டி ஹாலுக்கு சென்றதை என்னால் மறக்க முடியாது. மொத்தத்தில் ஒரு மணி நேரத்திற்கு மேலாகவும், குறைந்தது 9 டாலர் அதற்கு செலவு செய்ததையும் எப்படி மறக்க முடியும்!
அந்த ஐந்து நாட்களில், எனக்கு மூன்று தடவை, தாமே வலிய வந்து கொரிய நண்பர்கள் உதவி செய்தார்கள். இப்படிப் பட்ட உதவிகளை சிங்கப்பூர் அல்லது மலேசியாவில் நிச்சயமாக எதிர் பார்க்க முடியாது. ஒரு நாட்டின் முன்னேற்றம் அதன் வெளிப்புறத்தில் மட்டுமல்ல, மாறாக, அதை விட மேலாக, அந்நாட்டு மக்களின் மனதிலும் செயலிலும் தான் இருக்கிறது என்பதை அவர்கள் ஆணித்தரமாகக் காட்டினார்கள். இதே போன்ற ஓர் அனுபவத்தை அதற்கு முன்பாக நான் ஹாங்காங்கிலும் கிடைக்கப் பெற்றிருக்கிறேன்.ஒரு ஐம்பது மீட்டர் தூரத்தில் இருந்த ஹோட்டலுக்கு வலி தெரியாமல், அலைந்து களைப்புற்று ஒரு டாக்சியை நிறுத்திய பொழுது, எங்களை டாக்சியில் ஏற்றி இரண்டு நிமிடத்தில் ஹோட்டல் முன் நிறுத்தி கட்டணம் கூட வாங்காமல் போனார் அந்த டாக்சி டிரைவர்!அப்பொழுது அவர் சொன்னதை இன்றைக்கும் என்னால் மறக்க முடியாது - “இன்றைய நாள் உங்களுக்கு நல்ல நாளாக இருக்கட்டும்!”
ஆரம்பம் முதல் இறுதி வரை எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல், முற்றிலும் இனிமையான அனுபவங்களை எனக்கு அளித்த ஒரே பயணம் என்றால் அது கொரியப் பயணம் தான். அந்த பயணத்திற்கு பிறகு கொரியர்களின் மேல் எனக்கு இருந்த மதிப்பும் பிரமிப்பும் இன்னும் அதிகரித்தது. ஏற்கனவே எனது இரண்டு கொரிய மாணவர்கள் மூலமாக கொரிய பண்புகளை தெரிந்து கொண்டிருந்த நான், அவர்கள் மாணவர்கள் என்பதால் என்னுடன் பணிவாக நடந்து கொள்கிறார்கள் என்று எண்ணியிருந்தேன். அந்த எண்ணத்தை முற்றிலும் பொய்யாக்கி கொரியர்கள் உண்மையிலேயே பண்பானவர்கள் தான் என்பதை நான் சியோலில் நேரடியாகத் தெரிந்து கொண்டேன்.
இன்சியோனில் இருந்து புறப்பட்ட விமானம் சரியாக இரவு 11.30-க்கு சாங்கி விமான நிலையம் வந்தடைந்தது.
கருத்துகள்
கருத்துரையிடுக