சியோலில் ஐந்து நாட்கள் (3)

சியோலில் ஐந்து நாட்கள் [3]

20/12/2014 - மூன்றாம் நாள்.


முன்றாம் நாள் நாங்கள் அற்புதமான ஓர் இடத்திற்கு சென்றோம். சியோலில் இருந்து சுமார் 55 கிலோ மீட்டர்களுக்கு அப்பால் உள்ள இராணுவமற்ற தளம்தான் அது. ஆங்கிலத்தில் Demilitarized Zone (DMZ) என்று  அழைக்கப் படும் அது கொரிய தீபகற்பகத்தை தென் மற்றும் வட கொரியா என்று பிரிக்கிறது. இரண்டு கொரிய நாடுகளுக்கும் இடையே சுமார் 4 கிலோ மீட்டர் எல்லைப் பகுதியை இராணுவமற்ற பகுதியாக 1953-ம் ஆண்டு, கொரியப் போரின் இறுதியில் பிரகடனப் பட்டது. இந்த எல்லைப் பகுதி சுமார் 250 கிலோ மீட்டர்களுக்கு நீண்டு இருந்தாலும், பன்முன் ஜோம்  (Panmun Jom) எனும் ஒரே இடத்திற்குத் தான் சுற்றுப் பயணிகள் அனுமதிக்கப் படுகிறார்கள்.


தென் கொரியா செல்வதாக நாங்கள் முடிவெடுத்த பிறகு, இங்கு செல்ல வேண்டியது அவசியம் என்று நான் குறிப்பெடுத்துக் கொண்டேன். அதற்கு முக்கிய காரணம், சரித்திர பாடம், அதிலும் குறிப்பாக கொரிய  போரை பாடமாக போதிக்கும் நான், கொரியா  சென்றும் அங்கு போகா விட்டால்  எப்படி?


வட கொரிய  வீரர்களும், தென் கொரிய  வீரர்களும் ஆயுதம் தாங்கிய படி தமது எல்லைக் குள்ளிருந்தே ஒருவரை நோக்கி ஒருவர் துப்பாக்கிகைகளை ஏந்தியபடி விரைப்புடன் நின்று கொண்டிருக்கும் காட்சி, எனக்குள் பீதியை ஏற்படுத்தியது என்னவோ உண்மைதான்.


         தென் கொரிய ராணுவ வீரரும் 

                    வட கொரிய  வீரரும் 


உலகின் மிகப் பதட்டத்திற்குரிய பகுதியாக இது இருந்தாலும், சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் பகுதியாகவும் விளங்குகிறது. வருடத்திற்கு ஒரு லட்சத்திற்கும் அதிகமான சுற்றுப் பயணிகள் இங்கு வருகின்றனர்.



சுமார் இரண்டு மணி நேரங்கள் பான்முன் ஜோம்மில் கழித்த  பிறகு, நாங்கள் மறுபடியும் சியோலுக்கு திரும்பினோம்.அங்கு கியொங்க்பொக் குங் (Gyeongbokgung) அரண்மனைக்கு சென்றோம். சியோலில் உள்ள நான்கு  அரண்மனைகளுள் ஒன்றான அது 1395-ச கட்டப் பட்டது.


அந்த அரண்மனையில் மொத்தம் 7,700 அறைகள்  உள்ளன.



                                                    

ஜப்பானியர்களுடன் நடந்த பல போர்களில் இந்த அரண்மனை பலத்த சேதமடைந்தாலும், ஒவ்வொரு முறையும் அந்த அரண்மனை மறுபடி மறுபடி சீரமைக்கப் பட்டு, இன்று வரையில் மிக அழகாகக் காட்சியளிக்கிறது  லண்டனில் உள்ள பக்கிங்க்ஹாம் அரண்மனையில் நடக்கும் பாதுகாவலர்கள் மாறும் காட்சி போல, இங்கும் பாதுகாவலர்கள் மாறும் காட்சி சுற்றுப் பயணிகளால் ரசிக்கப் படுகிறது..


பாதுகாவலர்கள் மாறும் காட்சி 


நாள் முழுக்க வேண்டுமானாலும் அங்கு நேரத்தை செலவிடலாம். அவ்வளவு அழகு; அவ்வளவு சிறப்பு. கொரியர்கள், தமது கலை, கலாச்சாரம் மற்றும் சரித்திரத்தின் மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கிறார்கள். 

குளிர் காலத்தில் அரண்மனை ஏரி


மேலும் அது குளிர் காலமாதலால், நாங்கள் கியொங்க்பொக் குங் அரண்மனையில் எங்களது நேரத்தை உற்சாகத்துடன் செலவிட்டோம். அதற்கு இன்னொரு காரணம், இந்த மாதிரியான விடுமுறை சமயத்தில் நான் மின் மடலை பொருட்படுத்துவதில்லை. எனவே, வேலை சம்பந்தப் பட்ட எந்த அழுத்தமும் இல்லாமல் நேரம் கழிந்தது.


அன்றைய மாலை நாங்கள் சியோலின் இன்னொரு சிறப்பு மிக்க இடமான மியொங்க்டொங் (Myeongdong) சென்றோம். அது வேறு காரணங்களுக்காக பெயர் பெற்றது. மியொங்க்டொங், ஷாப்பிங்கிற்காக பெயர் பெற்ற இடம். இரவு நேரத்தில் அங்கு கூட்டம், அதிலும் குறிப்பாக இளைஞர்களின் கூட்டம் அலை மோதுகிறது. தென் கொரியர்கள், தோற்றத்திற்கும், உடுத்துகிற உடைக்கும் மிக முக்கியம் கொடுப்பவர்கள். 


ஆதலால், அங்கு மிகப் பிரமண்டமான விற்பனைக் கூடங்களும் தரம் வாய்ந்த உடைகளும் எங்கும் கிடைக்கின்றன. அது தவிர, தெரு மருங்கிலும் சிறு வியாபாரிகளின் அங்காடிக் கடைகள் அந்தப் பகுதிக்கு அழகு சேர்க்கின்றன.அதிலும் எனக்கு பிடித்தமான விஷயம், அந்த வியாபாரிகள் நமக்கு எந்த அழுத்தமும் கொடுக்காமல் நமது முடிவுக்கு மரியாதை கொடுக்கிறார்கள். கோலாலும்பூரில் உள்ள சைனா டவுனுக்கு முற்றிலும் எதிர்மாறாக நாம் இங்கு அமைதியாக பொருட்களைப் பற்றியும் அதன் விலைப் பற்றியும் வியாபாரிகளிடம் விசாரிக்க முடிகிறது.


மியொங்க்டொங்கிலேயே எங்களுடைய இரவு உணவை முடித்துக் கொண்டு, தேவையான பொருட்களையும் வாங்கிக் கொண்டு மகிழ்ச்சியாக அறைக்குத் திரும்பினோம்.


கருத்துகள்